சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற 240 கிலோமீட்டர் தொலைவிலான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டுள்ளது.
சிவகாசியில் உள்ள அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் உடற்கல்வித் துறையைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பேரணியில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். சிவகாசியில் இருந்து தென்காசி மாவட்டம் குற்றாலம் வரை சென்று, மீண்டும் சிவகாசி திரும்பும் வகையில் இந்த 240 கிலோமீட்டர் இருவழிச் சைக்கிள் பேரணி திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியானது ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தளவாய்புரம், முகவூர், தேவதானம், வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர் மற்றும் தென்காசி ஆகிய பகுதிகள் வழியாக 120 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து குற்றாலத்தைச் சென்றடைகிறது.
செல்லும் வழியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில், உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், விளையாட்டுத் துறையை மேம்படுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குற்றாலத்தை சென்றடையும் மாணவர்கள், அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு வரும் 31-ஆம் தேதி சிவகாசியை வந்தடையவுள்ளனர்.

