விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற 13 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் (இறகுப்பந்து) தரவரிசைப் போட்டியில் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட இறகுப்பந்துக் கழகம் சார்பில், சிவகாசியில் உள்ள தனியார் உள்விளையாட்டு அரங்கில் இப்போட்டிகள் நாக்-அவுட் முறையில் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த மே 25-ஆம் தேதி தொடங்கிய தொடரில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இத்தொடரின் இறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன.
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், சென்னையைச் சேர்ந்த ஜெஸ்ரிதா, கோவையைச் சேர்ந்த ரிஸ்விதாவை 2-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி முதலிடம் பிடித்தார். தொடர்ந்து நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில், ஜெஸ்ரிதா - ரிஸ்விதா ஜோடி, கிருஷ்ணகிரியின் துஷித்தா - ராணிப்பேட்டையின் அலினா ஜோடியை 2-1 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த அத்விக் 2-1 என்ற செட் கணக்கில் சக சென்னை வீரரான பிரணவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் இரட்டையர் பிரிவில் செங்கல்பட்டைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்களான சரத் - சரண் ஜோடி, சென்னை அத்விக் - கன்னியாகுமரி அமிதேஷ் ஜோடியை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தது.
போட்டிகள் நிறைவடைந்ததை அடுத்து, வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனைகளுக்குக் கேடயம், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

