நாமக்கல்: தமிழகத்தின் முக்கிய முட்டை உற்பத்தி மையமான நாமக்கல்லில் முட்டை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் நுகர்வு குறைந்தது மற்றும் சந்தை தேவையில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக கொள்முதல் விலை குறைந்துள்ளதாக கோழிப் பண்ணைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) நிர்ணயிக்கும் விலையை அடிப்படையாகக் கொண்டு, முட்டையின் கொள்முதல் விலை அண்மையில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் மொத்த விற்பனை மற்றும் சில்லறை சந்தைகளிலும் எதிரொலிக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.
உற்பத்தி தொடர்ந்து நிலைத்திருந்தாலும், வெப்பநிலை அதிகரிப்பால் முட்டை நுகர்வு குறைவது விலை சரிவுக்கான முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதி நிலவரத்தைப் பொறுத்து வரும் நாட்களில் விலையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, கடந்த 4 நாட்களில் 50 காசுகள் குறைந்துள்ளது. வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி குறைந்து நுகர்வோருக்கு இந்த விலை சரிவு ஓரளவு நிவாரணமாக அமைந்தாலும், உற்பத்திச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து தேவைக்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

