தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அரசு உதவி பெறும் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், சென்னை திரும்பும் வழியில் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களாலும் ஒருமனதாக பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவையின் மரபுகள் மற்றும் விதிகளை மதித்து, நடுநிலையுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். அவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், குறிப்பாக புதிய உறுப்பினர்கள் மற்றும் குறைவாக பேசும் உறுப்பினர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் வாய்ப்பு வழங்குவதை தனது முக்கிய பணியாக மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சரின் பதிலுரையின்போது, அவையின் அமைதியைக் குலைக்கும் வகையில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டதாக குறிப்பிட்ட பேரவைத் தலைவர், அவைக்குள் பதாகைகளை ஏந்துவது விதிகளுக்கு முரணானது என்றாலும், உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்றார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசுவதற்கு போதிய நேரம் வழங்கப்பட்டதாகவும், விவாதங்கள் மற்றும் முதலமைச்சர் பதில் உரையை முழுமையாகக் கேட்காமல் அவையைத் தடை செய்ய முயன்றது கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கூட்டத்தொடரின் அவைக்குறிப்புகளின்படி, விவாதங்களில் திமுக உறுப்பினர்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக அதிமுக உறுப்பினர்களுக்குமே அதிக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அனைத்து விவகாரங்களிலும் நடுநிலையான அணுகுமுறையே பின்பற்றப்பட்டிருப்பது தெளிவாகும் என்றும் கூறினார். ‘துண்டுச் சீட்டு’ விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அவர், சபையை நடத்துவதற்கு தனக்கு வழிகாட்டுதலாக எந்தவிதமான துண்டுச் சீட்டுகளும் வரவில்லை என்றும், அத்தகைய சீட்டுகளின் அடிப்படையில் தான் செயல்படுவதில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தார். சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை தொடர்பான சபையில் நடைபெற்ற முந்தைய விவாதங்களின் துல்லியமான தேதிகள் மற்றும் ஆண்டுகளைச் சரிபார்ப்பதற்காக மட்டுமே பேரவைச் செயலகத்திடமிருந்து குறிப்புகள் பெறப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார். காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தெரிவித்த பேரவைத் தலைவர், நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிநீக்கம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் அளித்துள்ள கோரிக்கை மனு தற்போது பரிசீலனையில் இருப்பதாக கூறினார். முதற்கட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட விசாரணைக்கான தேதிகள் முறைப்படி குறிக்கப்பட்டு நேரடி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார். சட்டமன்ற உரிமைக் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு, அதன் பணிகள் முறைப்படி நடைபெற்று வருவதாகவும், உறுப்பினர் மார்க்கண்டேயன் மீதான புகார் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். விளக்கம் பெறப்பட்ட பின்னர் உரிய விதிமுறைகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். புதிய சட்டமன்ற வளாகம் அமைப்பது தொடர்பாக அரசு முழுமையான விவரங்களை முறைப்படி வெளியிடும் என்றும், அந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமையும் என நம்புவதாகவும் பேரவைத் தலைவர் ஜெ.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
அரசியல்
“சபையை நடத்த எனக்கு ‘துண்டுச் சீட்டு’ எதுவும் வரவில்லை” – எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்கவில்லை என்ற புகாருக்கு சபாநாயகர் பதில்
🕒 14 செப்., 2026, 11:01 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •சபையை நடத்த எனக்கு ‘துண்டுச் சீட்டு’ எதுவும் வரவில்லை அதன்படி செயல்படவும் இல்லை எதிர்க்கட்சிகளை பேச அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் எழுந்த புகாருக்கு சபாநாயகர் பதில்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
