சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மதிப்பூதியம் உடனடியாக வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அருள் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகளில் ஈடுபட்ட அனைத்து அலுவலர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும், சட்டமன்றத் தேர்தல் மற்றும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குச் செலவிடப்பட்ட சில்லறை செலவினத்திற்கான நிதி ஒதுக்கீட்டை முழுமையாக வழங்க வேண்டும் என்றும், அரசாணை நிலை எண் 65-ன் அடிப்படையில் துணை வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்குவது குறித்து உயர்நீதிமன்ற இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் விரைவாக தெளிவுரை வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
பேரிடர் மேலாண்மை பிரிவில் கடந்த 2003-ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட முதநிலை வருவாய் ஆய்வாளர் பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
துறை அலுவலர்களின் பணித்தன்மை மற்றும் பணிச்சூழலின் அடிப்படையில் அனைத்து அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.
