அரசியல்
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு; சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை திசை திருப்புவதற்காக நடத்தப்பட்ட ரெய்டு - முன்னாள் அமைச்சர் நேரு பேட்டி!
🕒 29 அக்., 2026, 10:58 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.634 கோடி பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, திருச்சி தில்லை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தச் சோதனையின் முடிவில், அதிகாரிகள் அவரது வீட்டிலிருந்து சில முக்கிய கோப்புகள் மற்றும் அவரது தம்பி மணிவண்ணனின் தொழில் ரீதியான இரண்டு லேப்டாப்களை விசாரணைக்காக எடுத்து சென்றுள்ளனர்.
சோதனை நிறைவடைந்ததை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
இது புதிதாக தொடங்கப்பட்ட விசாரணை அல்ல. ஏற்கனவே உள்ள பழைய வழக்கின் அடிப்படையிலேயே மீண்டும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த முறையை விட தற்போது அதிகமான இடங்களில் சோதனை செய்துள்ளனர். எனது தம்பி மணிவண்ணனின் தொழில் ரீதியான இரண்டு லேப்டாப்களை எடுத்து சென்றுள்ளனர்.
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் பல இடங்களில் நடக்கும் சம்பவங்களை திசை திருப்புவதற்காகவே இந்த ரெய்டு நடத்தப்படுவதாகக் கட்சித் தலைவர் கூறியிருப்பது சரிதான். நிறைய இடங்களில் கொலை, கொள்ளை நடந்துள்ளது. சிறையில் இருந்து தப்பித்துள்ளனர். இதுபோன்ற செய்திகளை திசை திருப்புவதற்காக இந்த சோதனை நடைபெற்றிருக்கலாம்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை மனதில் வைத்து இந்த ரெய்டு நடத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு, அவர்கள் அப்படி நினைக்கலாம், ஆனால் நாங்கள் மக்கள் மீதான நம்பிக்கையோடும், கட்சித் தலைவர் இடும் கட்டளையை தட்டாமல் நிறைவேற்றும் தொண்டர்களின் பலத்தோடும் தேர்தலை சந்திப்போம். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இங்கே ரெய்டு
நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே திறந்த கோப்புகளின் அடிப்படையில் தான் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சியினர் ஏதாவது பேசுவார்கள்.
இது போன்ற சம்பவங்களை ஜெயலலிதா காலத்தில் எப்படி எதிர்கொண்டோமோ அதுபோல எதிர்கொள்வோம். ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் திமுகவினர் மீது நில மோசடி வழக்கு போடப்பட்டது. நீதிமன்றத்தின் மூலம் வாதாடி வெளிவந்தோம். அதுபோல நீதிமன்றம் சென்று இறுதி தீர்ப்பை பெறுவோம்.
திமுக வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாத இயக்கம். தாராபுரம், மதுராந்தகத்தில் மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளோம். நாங்கள் ஜெயிப்போம் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். திமுக என்றும் நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.
