விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் ரேஷன் கார்டு) வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, தங்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுவதாக வெளிவந்த தகவல்களுக்கு மேடையிலேயே முற்றுப்புள்ளி வைத்தார். அவர் பேசுகையில், "சமூக வலைத்தளங்களில் எங்களைப் பற்றிப் பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை. அமைச்சர் கீர்த்தனாவை எனது உடன்பிறந்த தங்கையாகவே கருதுகிறேன்; அவரும் என்னைச் சகோதரியாகவே நினைக்கிறார். இதற்கு எங்களது ஒற்றுமையே சாட்சி" எனக் கூறி, அமைச்சர் கீர்த்தனாவின் கைகளை உயர்த்திப் பிடித்தார். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, "எங்களது ஒற்றுமையில் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை. தங்கை கீர்த்தனாவின் சிறப்பான செயல்பாட்டைக் கண்டு, அவர் மீது நம்பிக்கை வைத்தே முதலமைச்சர் அவருக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கியுள்ளார். சீண்டுபவர்கள் சீண்டட்டும், போற்றுபவர்கள் போற்றட்டும்; நாங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மகிழ்ச்சியுடன் மக்கள் பணியாற்றி வருகிறோம். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இதே ஒற்றுமையுடன் செயல்படுவோம்" என உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், "தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களோடும் இணைந்து மாவட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வோம். விருதுநகர் மாவட்டத்திற்கு இரு பெண் அமைச்சர்கள் என்பதை விட, இரு 'பெண் புலிகள்' அல்லது 'சிங்கங்களாக' நின்று மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்" என்றார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு பெண் அமைச்சர்களிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளது மாவட்ட அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

