திருநெல்வேலி மாநகரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் இக்கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலை பூஜைகள், அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், மாலையில் சிறப்பு அலங்கார தீபாராதனையைத் தொடர்ந்து மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதியுலாவும் நடைபெற்றது.
விழாவின் 10-ஆம் திருநாளான இன்று, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலையிலேயே யாகசாலை பூஜைகள் மற்றும் ஹோமம் நடைபெற்றன. தொடர்ந்து விநாயகருக்கு 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித கும்பம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, விநாயகருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து விநாயகருக்கு தங்க முலாம் பூசப்பட்ட கவசம் மற்றும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

