ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணியின்போது, ஏற்கனவே பதிவான வாக்குகளை எண்ணாமல் புதிய மாதிரி வாக்குப்பதிவு செய்ய மட்டுமே தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனும், த.வெ.க. சார்பில் ஜெகதீஸ்வரியும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. வேட்பாளர் ஜெகதீஸ்வரி, தற்போது அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், ராஜபாளையத்தில் உள்ள 14 வாக்குப்பதிவு மையங்களின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) முறைகேடு நடைபெற்றதன் காரணமாகவே தனது வாக்கு சதவீதம் குறைந்து தோல்வியடைந்ததாக முன்னாள் எம்.எல்.ஏ தங்கப்பாண்டியன் குற்றம்சாட்டினார். மேலும், அந்த 14 வாக்குப்பதிவு இயந்திரங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தார்.
அம்மனுவின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சரிபார்க்கும் பணிக்காகத் தனி வட்டாட்சியர் ஒருவரை நியமித்தார். இதனைத் தொடர்ந்து, விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பறை திறக்கப்பட்டு, புகாருக்குரிய 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வெளியே எடுக்கப்பட்டன.
அனைத்து அரசியல் கட்சியினரின் முன்னிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து வருகை தந்த 'பெல்' (BEL) நிறுவனப் பொறியாளர்கள், அந்த 14 வாக்குப்பதிவு இயந்திரங்களையும் ஒவ்வொன்றாகப் பரிசோதித்துச் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், இந்த ஆய்வின்போது ஏற்கனவே பதிவான பழைய வாக்குகளை எண்ணிச் சரிபார்க்க முடியாது என்றும், புதிய வாக்குகள் பதிவு செய்து (மாதிரி வாக்குப்பதிவு) இயந்திரங்களின் செயல்பாட்டை மட்டுமே சரிபார்க்க முடியும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குகள் சரிபார்க்கப்படும் என்ற நம்பிக்கையில் வந்த தங்கப்பாண்டியன் தரப்பினருக்குத் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பெரும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ராஜபாளையம் திமுக நகரச் செயலாளர் ராமமூர்த்தி கூறுகையில், "பழைய வாக்குகளை எண்ணிச் சரிபார்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே வந்தோம். ஆனால், புதிய வாக்குகள் பதிவு செய்து பார்க்கலாமே தவிர பழைய வாக்குகளை எண்ண முடியாது எனத் தேர்தல் ஆணையம் மறுப்பது ஏற்புடையதல்ல," என்று தெரிவித்தார்.

