விருதுநகர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி ஒருவருக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தொலைபேசியில் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோ பதிவில், தவெக சாத்தூர் வடமேற்கு ஒன்றியச் செயலாளர் ராஜகுருவிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுவது போல் அமைந்துள்ளது. அதில், சாத்தூர் தவெக வடக்கு ஒன்றியச் செயலாளர் லட்சுமணன் என்பவர் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருவதற்கும், அங்கு இனிப்புகள் (லட்டு) வழங்குவதற்கும் யார் அதிகாரம் கொடுத்தது என்று அமைச்சர் தீவிரமாகக் கேள்வி எழுப்புகிறார்.
மேலும், “சாத்தூரைச் சேர்ந்த ஒருவர் எவ்வாறு ராஜபாளையத்தில் வந்து பேச முடியும்? இதுகுறித்து லட்சுமணனிடம் எச்சரித்து விடுங்கள். அவர் மீது சட்டப்படி புகார் அளித்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுப்பேன். தொடக்கம் முதலே அவர் என்னை சீண்டிக் கொண்டே இருக்கிறார். ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்பு அவரது கட்சியின் பொதுச் செயலாளரே அவரைக் கண்டித்துள்ளார்” என்று ஆவேசமாகப் பேசும் குரல் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, தனது தொகுதிக்குள் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நுழையக் கூடாது என்றும், மீறி நுழைந்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவதூறான வார்த்தைகளுடன் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்த உரையாடல் நீள்கிறது.
தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த ஆடியோ பதிவு, மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

