விருதுநகர் சிவந்திபுரம் பகுதியில் பாலித்தீன் பைகளில் அச்சிடும் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் தீக்கிரையாகின.
விருதுநகர் முத்துராமன்பட்டியைச் சேர்ந்த பொன் கணேஷ் என்பவர் சிவந்திபுரம் பகுதியில் பாலித்தீன் பைகளுக்கு அச்சிடும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்நிலையில், நள்ளிரவில் தொழிற்சாலையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட தீ, தொழிற்சாலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களில் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருதுநகர் தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் மூலப்பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

