விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவின் நிறைவு நாளான இன்று, வள்ளி, தெய்வானை சமேதராக சுவாமி பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்த நிகழ்வு பக்திப் பெருக்குடன் நடைபெற்றது.
இக்கோயிலின் ஆவணிப் பெருந்திருவிழா கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. விழா நடைபெற்ற நாள்களில், நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிவசுப்பிரமணிய சுவாமி பல்வேறு வாகனங்களில் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
திருவிழாவின் இறுதி நாளான இன்று, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் வள்ளி மற்றும் தெய்வானையுடன் எழுந்தருளிய சிவசுப்பிரமணிய சுவாமி, முக்கிய நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்தார். அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வீதியுலாவின் நிறைவாக பூப்பல்லக்கு திருக்கோயில் சந்நிதானத்தை வந்தடைந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

