மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பிலிருந்து மொத்தம் 280 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 25 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 17 மனுக்களும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 19 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 26 மனுக்களும் அளிக்கப்பட்டன. மேலும், பல்வேறு புகார்கள் தொடர்பாக 24 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, உதவித்தொகை, வங்கிக் கடன் மற்றும் உபகரணங்கள் கோரி 8 மனுக்களும், அடிப்படை வசதிகள் கோரி 37 மனுக்களும், நில அபகரிப்பு மற்றும் நிலப் பிரச்சினைகள் தொடர்பாக 29 மனுக்களும், மகளிர் உரிமைத்தொகை கோரி 95 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பான மனுக்களும் பெறப்பட்டன.
பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்த மாவட்ட ஆட்சியர், மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்கவும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரர்களுக்குத் தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, விழாவில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதன்படி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு 40 சதவீத மானியத்தில் குளிர்காப்புப் பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் மாவட்ட அளவிலான சிறப்பு இயக்கத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 5 அங்கன்வாடி பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.5,000 மதிப்பிலான விலையில்லா மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.10,000 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளும் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கீதா உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

