Settings

முகப்பு/கல்வி/ஒரு மாதம் படித்த மாணவியை திடீரென கல்லூரியை விட்டு வெளியேற்றியது நியாயமா?
கல்வி

ஒரு மாதம் படித்த மாணவியை திடீரென கல்லூரியை விட்டு வெளியேற்றியது நியாயமா?

🕒 28 அக்., 2026, 12:06 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
ஒரு மாதம் படித்த மாணவியை திடீரென கல்லூரியை விட்டு வெளியேற்றியது நியாயமா?
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பார்மசி கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் படித்து வந்த மாணவியை ஒரு மாதத்திற்குப் பிறகு நிர்வாகம் வெளியேற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள தனியார் பார்மசி கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்று பயின்று வந்த மாணவியை, ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லூரி நிர்வாகம் திடீரென வெளியேற்றிய சம்பவம் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி அடுத்த கோவிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி புகழேந்திரன் என்பவரது 18 வயது மகள் அனுபிரியா, 2025–2026 கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வி முடித்த பின், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி கிராமத்தில் இயங்கி வரும் ஜி.பி. பார்மசி கல்லூரியில் பி.பார்ம் (B.Pharm) படிக்க விண்ணப்பித்துள்ளார். அரசு ஒதுக்கீட்டின் கீழ் மாணவிக்கு இடம் கிடைத்துள்ளதாகக் கல்லூரி நிர்வாகம் அழைத்ததை அடுத்து, கடந்த 02.07.2026 அன்று ஆண்டு கல்விக் கட்டணமான ரூ.50,000-ல் முன்பணமாக ரூ.30,500-ஐ அவரது தந்தை செலுத்தி ரசீது பெற்றுள்ளார். மேலும், 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கல்லூரியில் ஒப்படைத்துள்ளார். மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ.19,500-ஐ நிர்வாகம் கேட்கும் போது செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 16, 2026 முதல் மாணவி அனுபிரியா முதலாம் ஆண்டு வகுப்புகளுக்குத் தொடர்ந்து சென்று வந்துள்ளார். வருகைப் பதிவேட்டிலும் இவரது பெயர் இடம்பெற்றிருந்த நிலையில், கடந்த அக்டோபர் 23 அன்று மீதித் தொகையைச் செலுத்த கல்லூரி நிர்வாகம் கோரியுள்ளது. கடன் பெற்றுப் பணத்தைத் தயார் செய்த மாணவியின் தந்தை புகழேந்திரன், அக்டோபர் 26 அன்று கல்லூரிக்குச் சென்றுள்ளார்.

அப்போது, மூன்று நாட்கள் தாமதமாக வந்துவிட்டதாகவும், மாணவியின் இடத்தை வேறு நபருக்கு வழங்கிவிட்டதாகவும் கூறி, பணத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்த கல்லூரி நிர்வாகத்தினர், மாணவியை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். அன்றைய தினமே வருகைப் பதிவேட்டிலிருந்து மாணவியின் பெயரும் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை முடிவடைந்துவிட்ட சூழலில், அரசு ஒதுக்கீட்டில் கிடைத்த இடம் பறிக்கப்பட்டதால் தனது மகளின் ஓராண்டு கல்வி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகப் புகழேந்திரன் கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மாணவி தொடர்ந்து கல்வி பயில வழிவகை செய்யக் கோரியும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்குப் பாதிக்கப்பட்ட மாணவி புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்துக் கல்லூரித் தாளாளர் பொன்னுசாமியிடம் விளக்கம் கேட்டபோது, "புகழேந்திரனின் மகள்கள் இருவர் ஏற்கனவே இதே கல்லூரியில் படித்துவிட்டு ரூ.2 லட்சத்திற்கும் மேல் கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளனர். மேலும் பல மாணவர்கள் கட்டணம் செலுத்தாததால், நாங்கள் வட்டிக்குப் பணம் வாங்கி கல்லூரியை நடத்தி வருகிறோம். மாணவர் சேர்க்கை குறைந்தால் அங்கீகாரம் மறுக்கப்படும் என்பதால் சேர்க்கையை முறையாக நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔