புதுக்கோட்டை மாவட்டம் நல்லூர் சுங்கச்சாவடி அருகே காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 1 கிலோ 750 கிராம் எடையுள்ள 8 தங்கக் கட்டிகளை திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளான நாகப்பட்டினம் முதல் ராமேஸ்வரம் வரையிலான கடல் மார்க்கத்தை சர்வதேச கடத்தல்காரர்கள் பயன்படுத்தி, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களையும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு தங்கக் கட்டிகளையும் கடத்துவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் தங்கம் கடத்தல் சற்று குறைந்திருந்த நிலையில், மீண்டும் கடத்தல் நடைபெறுவதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து திருச்சி நோக்கி காரில் தங்கம் கடத்திச் செல்லப்படுவதாகக் கிடைத்த உறுதியான தகவலின் அடிப்படையில், திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டம் நல்லூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாகச் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த எர்ட்டிகா ரக காரை வழிமறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின்போது, காருக்குள் கார்பன் பேப்பர் மற்றும் கருப்பு நிற டேப் சுற்றி மிகவும் தந்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, தங்கக் கட்டிகளையும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், காரை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சையது நபில்கான் (25) என்பவரைக் கைது செய்தனர்.
பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள் திருச்சி சுங்கத்துறை அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு துல்லியமாக எடை போடப்பட்டது. அப்போது அதன் மொத்த எடை 1 கிலோ 750 கிராம் என்பது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது. இந்தத் தங்கக் கட்டிகள் இலங்கையிலிருந்து கடல் வழியாக எங்கு கடத்தி வரப்பட்டன, யாருக்கு விநியோகம் செய்யக் கொண்டு செல்லப்பட்டன மற்றும் இதன் பின்னணியில் உள்ள சர்வதேச கடத்தல்காரர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் சையது நபில்கானிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.









