மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேசியப் பறவையான மயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது விளைநிலங்களில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருவதால், உணவு மற்றும் பாதுகாப்பைத் தேடி மயில்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது வழக்கமாகியுள்ளது.
குறிப்பாக, சீர்காழி, கொள்ளிடம் மற்றும் அதனை ஒட்டிய கடற்கரையோர கிராமங்களில் மாங்குரோவ் மற்றும் சவுக்கை மரக்காடுகள் அதிக அளவில் இருப்பதால், இப்பகுதிகளில் மயில்களின் இனப்பெருக்கம் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் கிராமப்புறங்களில் மயில்கள் சுதந்திரமாக உலா வருவதோடு, சில இடங்களில் வீடுகளுக்கு அருகிலும் வந்து செல்கின்றன.
இந்நிலையில், சீர்காழி அருகே உள்ள எடமணல் மேலப்பாளையம் கிராமத்தில் இரண்டு ஆண் மயில்கள் சாலையில் நீண்ட நேரம் ஆக்ரோசமாக சண்டையிட்டுக் கொண்டன. இந்த அரிய காட்சியை அவ்வழியாகச் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.









