ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஆடி மாத முளைக்கொட்டுத் திருவிழாவை முன்னிட்டு, 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட முளைப்பாரி ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவஞானபுரம் ஸ்ரீ மூங்கிலி காளியம்மன் - மாரியம்மன் கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆராய்ச்சிபட்டி மேலத்தெரு, தெற்குப்பட்டி, மடத்துப்பட்டி, ஊரணிபட்டி, கீழப்பட்டி உள்ளிட்ட ஏழு தெருக்களைச் சேர்ந்த சுமார் 5,000 குடும்பத்தினர் ஒருங்கிணைந்து இத்திருவிழாவைக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக வீரசைவ லிங்காயத்துகள், பிள்ளைமார் மற்றும் சாலியர் சமூகத்தினர் இணைந்து பாரம்பரிய முறைப்படி இவ்விழாவை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் தொடங்கிய இத்திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் தீவிர விரதமிருந்து தங்கள் வீடுகளில் முளைப்பாரி வளர்த்து வந்தனர். இத்திருவிழாவில் பங்கேற்று முளைப்பாரி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினால், திருமண பாக்கியம் இல்லாத பெண்களுக்குத் திருமணமும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு மகப்பேறும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
விழாவின் நிறைவு நாளான இன்று, விரதமிருந்த 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரிகளை ஏந்தி நகர்வலமாகச் சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஸ்ரீ மூங்கிலி காளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் மற்றும் காமராஜர் சிலை வழியாகப் பயணித்து பட்டத்தரசி அம்மன் கோவிலைச் சென்றடைந்தது. அங்கு முளைப்பாரிகள் முறைப்படி நீரில் கரைக்கப்பட்டன.
மேளதாளங்கள் முழங்க, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆட்ட பாட்டத்துடன் கலைகட்டிய இந்த ஊர்வலத்தில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

