விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் புகழ்பெற்ற அருள்மிகு துணைமாலை அம்மன் சமேத ஸ்ரீ திருமேனிநாதர் திருக்கோவில் ஆடித்தபசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தபசு காட்சி, குண்டாற்றுப் பகுதியில் மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இத்திருக்கோவிலின் ஆடித்தபசுத் திருவிழா கடந்த ஜூலை 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி மற்றும் அம்பாள் சிம்ம வாகனம், குதிரை, அன்னம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவிழாவின் 10-ஆம் நாளான முக்கிய நிகழ்வாக, ஆடித்தபசு நிகழ்ச்சி குண்டாற்றில் நடைபெற்றது. துணைமாலை அம்மன் தபசு மண்டபத்தில் ஸ்ரீ திருமேனிநாதரை அடைவதற்காகத் தவம் மேற்கொண்டார். அம்மனின் தவத்தைக் கண்டு மகிழ்ந்த திருமேனிநாதர், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்மனுக்குக் காட்சி தந்து சாந்தப்படுத்தினார். தொடர்ந்து, குண்டாற்றில் திருமேனிநாதருக்கும் துணைமாலை அம்மனுக்கும் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. அம்பாள் சுவாமியை மூன்று முறை வலம் வந்ததைத் தொடர்ந்து, சுவாமி-அம்பாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஆடித்தபசுத் தரிசனத்தைக் காண்பதன் மூலம் குடும்பப் பிரச்சினைகள் தீரும், திருமணத் தடைகள் விலகும் மற்றும் மகப்பேறு பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த விழாவைக் காண விருதுநகர், மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டாற்றுப் பகுதியில் குவிந்தனர்.
விழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக, திருச்சுழி துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நிறைவாக, சுவாமியும் அம்பாளும் திருவீதி உலாவாகக் கோவிலைச் சென்றடைந்தனர்.

