மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்' (ABDM) திட்டத்தின் கீழ், வெளிநோயாளிகளுக்கான ஆன்லைன் முன்பதிவில் (Online OP Registration) 90 சதவீத இலக்கை எட்டி, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டையுடன் (ஸ்மார்ட் கார்டு) இணைக்கப்பட்ட அலைபேசி எண் ஆகியவற்றைப் பயன்படுத்தி, டிஜிட்டல் முறையில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் மருத்துவச் சிகிச்சை வரலாற்றுத் தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன.
இவ்வாறு கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் தரவுகள் மூலமாக, நோயாளிகள் தமிழ்நாட்டின் எந்தவொரு அரசு மருத்துவமனைக்குச் சென்றாலும், அவர்களின் முந்தைய மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை விவரங்களை மருத்துவர்கள் கணினி வழியே உடனடியாக ஆய்வு செய்ய முடியும். இது நோயாளிகளுக்குக் காலதாமதமின்றி துல்லியமான தொடர் சிகிச்சையை விரைவாக வழங்க பெரிதும் உதவுகிறது.
மாநில அளவில் இத்தகைய சிறப்பான சாதனையை நிகழ்த்தி முதலிடம் பிடித்துள்ள விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திற்கும், இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய மருத்துவக் குழுவினருக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

