விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை மற்றும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் தேர்த்திருவிழாக்களை முன்னிட்டு, தற்காலிக உணவகங்கள் அமைப்போரும் அன்னதானம் வழங்குவோரும் கட்டாயம் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும், மீறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோவிலின் ஆடிப்பூரம் தேர்த்திருவிழா வரும் 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்றும், மதுரை மாவட்டம் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலின் ஆடி அமாவாசை திருவிழா 12.08.2026 (புதன்கிழமை) அன்றும் நடைபெறவுள்ளன.
இத்திருவிழாக்களை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, அழகாபுரி, தாணிப்பாறை ஆகிய பகுதிகளில் ஏராளமான தற்காலிக உணவுக் கடைகள் அமைப்பதற்கும், அன்னதானங்கள் வழங்குவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அன்னதான அமைப்பாளர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் பின்வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் முக்கிய நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும்:
முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்:
- இணையவழி பதிவு: அன்னதானங்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் நடத்துவோர், சமையல் குழுவினர் (Caterers) அனைவரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வணிகத்தைப் பதிவு செய்து உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழைப் பெற வேண்டும்.
- குடிநீர் பரிசோதனை: சமையலுக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படும் தண்ணீரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அல்லது பொது சுகாதாரத் துறை பகுப்பாய்வுக் கூடங்களில் பரிசோதித்து பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும். முன் அனுமதியின்றி தனியார் ஆழ்துளைக் கிணறுகளின் நீரைப் பயன்படுத்தக் கூடாது.
- சுகாதாரமான சூழல்: உணவுகளை ஈக்கள் மற்றும் அசுத்தங்கள் இல்லாத சுகாதாரமான சூழலில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளைச் சேர்க்கக் கூடாது.
- சமையல் எண்ணெய் பயன்பாடு: சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது.
- விவரக் குறிப்புகள்: பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் ஆகியவை கட்டாயம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். காலாவதியான அல்லது கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்யக் கூடாது.
- பணியாளர் சுகாதாரம்: உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் பணியாளர்கள் டைபாய்டு மற்றும் மஞ்சள்காமாலைக்கு எதிரான தடுப்பூசி செலுத்தி, தொற்றுநோயற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும், கையுறை மற்றும் முடிக் கவசம் அணிவது கட்டாயமாகும்.
- பணிப் பகிர்வு: சாப்பாட்டு மேஜை மற்றும் வளாகத்தைச் சுத்தம் செய்யும் நபர்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.
சிறப்பு பயிற்சி மற்றும் மருத்துவ முகாம்:
உணவு வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்கவும், உணவைக் கையாளுபவர்களுக்கு டைஃபாய்டு தடுப்பூசி செலுத்தி மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும் சிறப்பு முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாம் வரும் 04.08.2026 அன்று காலை 11.00 மணியளவில் அழகாபுரியில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் பயிற்சி மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படும். டைஃபாய்டு தடுப்பூசிக்கான கட்டணத்தை மட்டும் உணவுக் கையாளுபவர்கள் அல்லது நிறுவன உரிமையாளர்கள் செலுத்த வேண்டும்.
எனவே, வத்திராயிருப்பு, தாணிப்பாறை, அழகாபுரி மற்றும் திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த உணவு வணிகர்கள் மற்றும் அன்னதான அமைப்பாளர்கள் இச்சிறப்பு முகாமில் தவறாது கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.

