Settings

முகப்பு/அரசியல்/"நடிப்பு வேறு, ஆட்சி நிர்வாகம் வேறு" - அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்!
அரசியல்

"நடிப்பு வேறு, ஆட்சி நிர்வாகம் வேறு" - அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்!

🕒 30 அக்., 2026, 05:00 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
"நடிப்பு வேறு, ஆட்சி நிர்வாகம் வேறு" - அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்!
✨

AI Highlights

  • •வரும் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம்காண்பதாகவும், அம்பாசமுத்திரம் தொகுதியில் தாமே நேரடியாகப் போட்டியிட உள்ளதாகவும் ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் அறிவித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வரவிருக்கும் ஐந்து தொகுதி இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்துக் களம்காணும் என்றும், அம்பாசமுத்திரம் தொகுதியில் தாமே நேரடியாக வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு ஈழப்போர் தீவிரமடைந்த காலகட்டத்தில், திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகத் தொடரப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்ட வழக்கின் விசாரணைக்காக, 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருநெல்வேலி நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது:

"அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்கும் தாய்மார்களுக்கு அரை கிராம் தங்க மோதிரம் வழங்குவதற்காக ரூ.755 கோடி ஒதுக்கியுள்ளனர். மோதிரம் வழங்குவதை விட, மருத்துவமனைகளில் ஸ்கேன் கருவிகள், சுத்தமான கழிப்பறைகள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கி அதன் தரத்தை உயர்த்துவதுதான் உண்மையான அரசாங்கத்தின் பணியாக இருக்க வேண்டும். ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தரமற்ற மருத்துவச் சேவையால் குழந்தைகள் உயிரிழக்கும் அவலங்கள் அரங்கேறுகின்றன.

தாலிக்குத் தங்கம் வழங்கியதாகப் பெருமை பேசும் அரசு, தாங்கள் விற்கும் மது காரணமாக இரண்டரை இலட்சம் பெண்கள் தங்கள் தாலியை இழந்தது குறித்தும் பேச வேண்டும். ஏற்கெனவே 13 இலட்சம் கோடி ரூபாய் கடன் சுமை உள்ள நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே 60 முதல் 70 ஆயிரம் கோடி ரூபாய் வரை புதிதாகக் கடன் பெறப்பட்டுள்ளது. கடன் பெற்று இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது; இவை வெற்று அறிவிப்புகளே.

பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக 'சிங்கப் பெண்' படையை உருவாக்குவதாகக் கூறுகிறார்கள். பெண்களைப் பெண்கள்தான் காப்பாற்ற வேண்டுமா? பெற்ற தாயையும், உடன்பிறந்த சகோதரியையும் பாதுகாக்க வேண்டிய கடமை ஓர் ஆண்மகனுக்கு இல்லையா? தெருவுக்குத் தெரு குற்றச் சம்பவங்கள் நடக்கும்போது, ஆண்களைப் பாதுகாக்க 'சிங்க ஆண்' படை அமைப்பீர்களா? சொந்தக் கட்சி நிர்வாகியே குற்றங்களில் ஈடுபடும் சூழலில், பெண்களுக்கான பாதுகாப்பு எங்குள்ளது? ஒரு திட்டமானது தொலைநோக்குப் பார்வையுடன் இருக்க வேண்டும், ஆனால் இந்த அரசிடம் அது இல்லை.

தற்போதைய ஆட்சியைப் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியுடன் ஒரு அமைச்சர் ஒப்பிடுகிறார். அவர் வகிக்கும் பதவியைப் பறித்துவிட்டால் இதே வார்த்தையைப் பேசுவாரா? முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சூழ, சாலையை நெடுநேரம் மறித்து, மக்களை வெயிலில் நிற்க வைத்துச் செல்வதுதான் காமராஜர் ஆட்சியா? நாகப்பட்டினத்தில் ரூ.500 கோடி மதிப்பிலான 150 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் பிடிபட்டுள்ள விவகாரத்தில், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களின் தொடர்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

திருச்சி சிறையில் கைதிகள் தப்பியோடியதற்கு டிஐஜியை மட்டும் இடமாற்றம் செய்வதால் என்ன பயன்? லால் பகதூர் சாஸ்திரி காலத்தில் ரயில் விபத்து ஏற்பட்டபோது அவர் தன் பதவியை ராஜினாமா செய்தாரே, அந்த நேர்மை இவர்களிடம் உள்ளதா? நிர்வாகக் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டிய தில்லிப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலையரசன் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். மக்களின் குரல்வளையை நெரிப்பதுதான் ஜனநாயகமா?

வரவிருக்கும் ஐந்து தொகுதி இடைத்தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்துப் போட்டியிடும். குறிப்பாக, அம்பாசமுத்திரம் தொகுதியில் நானே நேரடியாக வேட்பாளராகக் களமிறங்க முடிவு செய்துள்ளேன். நਵம்பர் 26 அன்று திருநெல்வேலியில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழாவும், நவம்பர் 27 அன்று அம்பாசமுத்திரத்தில் மாவீரர் நாள் பொதுக்கூட்டமும் பிரம்மாண்டமாக நடைபெறும். அன்றிலிருந்து எங்களது தேர்தல் களம் சூடுபிடிக்கும்.

அரசியல் என்பது திரைக்கவர்ச்சி அல்ல; நடிப்பு வேறு, ஆட்சி நிர்வாகம் வேறு. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டும். திரைக்கவர்ச்சி காலப்போக்கில் மங்கிவிடும், ஆனால் இன எழுச்சி மட்டுமே என்றென்றும் நிலைத்திருக்கும். மேலும், முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய சோதனைகளையும், கைது நடவடிக்கைகளையும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது" என்றார் சீமான்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔