விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட 32 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் ₹1 கோடி மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் கடந்த 26-ஆம் தேதி, சட்டவிரோத பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் சட்டவிரோத பட்டாசு உற்பத்தியை முற்றிலும் தடுக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவின்படி, கடந்த 3 நாட்களாக சிவகாசி, வெம்பக்கோட்டை, ஆலங்குளம் மற்றும் ஏழாயிரம்பண்ணை ஆகிய காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அதிரடி சோதனையின் போது, பல்வேறு இடங்களில் தகரக் கொட்டகைகள் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாகக் காவல்துறையினர் 14 வழக்குகளைப் பதிவு செய்து, 32 பேரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் ₹1 கோடி மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், விதிகளுக்குப் புறம்பாக பட்டாசு தயாரிப்பவர்களைக் கண்டறிய இத்தகைய அதிரடி ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

