விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பட்டாசுகள் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் எஸ்பி கவுதம் கோயல் தலைமையில், டிஎஸ்பி பாலசுந்தரம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நடைரோந்து மேற்கொண்டனர். நகர் காவல் நிலையத்தில் தொடங்கிய இந்த ரோந்துப் பணி, பேருந்து நிலையம், சின்னக்கடை பஜார், ராமகிருஷ்ணாபுரம் சந்திப்பு, பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் சர்ச் சந்திப்பு உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் வழியாகச் சென்றது. அப்போது எஸ்பி பொதுமக்களிடமும் வர்த்தகர்களிடமும் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் கூறியதாவது:
- தீபாவளிப் பண்டிகையின் போது மக்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சிவில் உடையிலும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூர் செல்வோர்கள் தங்களது வீட்டைப் பூட்டிவிட்டுச் செல்வது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தால், உரிய பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
- வீடுகளில் தனியாக வசிக்கும் முதியோர்களைக் கண்டறிந்து கணக்கெடுத்து, அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதைத் தடுக்க ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை மூலமாகவும், பேருந்து நிலையங்களில் கூடுதல் காவலர்களை நியமித்தும் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

