நாமக்கல்லில் மாவட்ட அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தச் சிலர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்துவதாகக் கூறி, 200-க்கும் மேற்பட்ட கபடி வீரர்களுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கபடி கழகச் செயலாளர் மனு அளித்தார்.
நாமக்கல் மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட கபடி வீரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்து கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் செயலாளராக தான் பொறுப்பு வகித்து வருவதாகவும், மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி வரும் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி மலையாப்பட்டியில் நடத்துவதற்குரிய அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சில தனிநபர்கள் இந்தப் போட்டியை எப்படியாவது தடுத்து நிறுத்த முயல்வதாகவும், போட்டி நடத்தப்பட்டால் பிரச்சினைகள் உருவாக்கப்படும் என்று மிரட்டல் விடுத்து வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் தனது கழகப் பொறுப்புக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுவதுடன், போட்டியை எதிர்நோக்கியுள்ள இளம் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளின் எதிர்காலம் மற்றும் நலன் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, கபடி போட்டிக்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது உரிய விசாரணை நடத்தி, அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

