Settings

முகப்பு/நகரங்கள்/25 ஆயிரம் மக்கள் வசிக்கும் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி!
நகரங்கள்

25 ஆயிரம் மக்கள் வசிக்கும் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி!

🕒 3 நவ., 2026, 11:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
25 ஆயிரம் மக்கள் வசிக்கும் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி! - படம் 1
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் பேருந்து நிழற்குடை மற்றும் சேதமடைந்த சாலைகளால் 25 ஆயிரம் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பேரூராட்சியில் பேருந்து நிழற்குடை மற்றும் முறையான சாலை வசதி இல்லாததால் சுமார் 25,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மொத்தம் 18 வார்டுகளைக் கொண்ட இப்பேரூராட்சியில் பல ஆண்டுகளாகப் பேருந்து நிலையம் இல்லாத நிலை நீடிக்கிறது. இதனால், பயணிகள் பயன்படுத்தும் முக்கியப் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை இன்றி பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியிலுள்ள சாலைகள் குண்டும் குழியுமாகச் சேதமடைந்து காணப்படுவதால், வாகன ஓட்டிகளும், பள்ளிக்குச் சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மம்சாபுரம் வரை செல்லும் 6 கிலோமீட்டர் தொலைவிலான குறுகிய சாலை விபத்து அபாயத்தைக் கொண்டிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காந்திநகர் பகுதியில் மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, சாலை அகலப்படுத்தப்பட்டு கண்ணன் காலனி வரை அமைக்கப்பட்டது. இருப்பினும், அதற்குப் பிறகு உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத காரணத்தால் சாலை விரிவாக்கப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மம்சாபுரம் பேரூராட்சி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, உடனடியாகச் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவுபடுத்திச் சீரமைப்பதோடு, பேருந்து நிறுத்தத்தில் புதிய பயணிகள் நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔