விழுப்புரம் மாவட்டம்: காணாமல் போன சிறுமி ஹேமலதாவின் பெற்றோரை நேரில் சந்தித்து தேமுதிக மாவட்டச் செயலாளர் எல். வெங்கடேசன் ஆறுதல் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் காணாமல்போன சிறுமி ஹேமலதாவின் இல்லத்திற்குத் தேமுதிக மாவட்டச் செயலாளர் எல். வெங்கடேசன் நேரில் சென்று, அவரது பெற்றோரான வடிவேல் மற்றும் பவானியைச் சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது:
"தமிழகக் காவல்துறையால் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நம்ப முடியாததாக உள்ளது. தேனியில் 17 பேர் தப்பியோடியுள்ளனர்; அவர்கள் தப்பினார்களா அல்லது தப்பவிடப்பட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் தற்போதைய சட்டம்-ஒழுங்கு நிலை கவலை அளிக்கும் வகையில் உள்ளது. காவல்துறையினர் தீவிரமாகப் புலனாய்வு செய்து சிறுமியை விரைந்து மீட்க வேண்டும்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் காணாமல் போவதைத் தடுத்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகம் ஒரு காலத்தில் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது. ஆனால், தற்போது உயர்தரப் போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் புழக்கத்தில் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 'சிங்கப் பெண் படைக்கு' ஒரே ஒரு ஆய்வாளரும் நான்கு காவலர்களும் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கொண்டு மாவட்டம் முழுவதும் எவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியும்?
காவல்துறையைக் தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதிலும், தன்னை விமர்சிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வதிலும் மட்டுமே அதிக அக்கறை செலுத்துகிறார்" என்றார்.

