வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள முன்னாள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும், திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான நந்தகுமாரின் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகு நிறைவடைந்தது.
காந்தி நகர் பகுதியில் உள்ள நந்தகுமாரின் இல்லத்தில், அக்டோபர் 29-ம் தேதி காலை 9 மணிக்கு 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையைத் தொடங்கினர். நகராட்சி பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நந்தகுமாரின் வீட்டின் முன்பு 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அதிகாரிகள் வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலும் தீவிர சோதனை நடத்தினர்.
மாலை 6 மணிக்கு சோதனை நிறைவடைந்து அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். சோதனையின்போது மூன்று பைகளில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நந்தகுமார், தனது வீட்டில் பணம் மற்றும் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை உயர் அதிகாரிகள் மூலம் பத்திரிகை செய்தி வாயிலாக வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.




