சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வசிக்கும் யானைகள், உணவைத் தேடி அவ்வப்போது சாலைகளில் உலா வருவதும், வாகனங்களை வழிமறிப்பதும் தொடர்கதையாகியுள்ளது.
அந்த வகையில், தாளவாடி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைக்கூட்டம் ஒன்று, அப்பகுதியின் வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை திடீரென வழிமறித்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சமீப காலமாக வனப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக, கரும்பு மற்றும் காய்கறி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை யானைகள் குறிவைத்துத் தாக்கி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். லாரிகளின் மீது போர்த்தப்பட்டுள்ள தார்பாய்களைக் கிழித்து, உணவை உட்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்லும் லாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வனப்பகுதியை கடக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

