மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொறையார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில் கால்நடைகளும், தெருநாய்களும் பெருமளவில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொறையார் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ராஜீவ்புரம், தரங்கம்பாடி மற்றும் சங்கரன்பந்தல் சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் கால்நடைகள் நடுரோட்டில் நிற்பதும், படுத்துக்கிடப்பதும் வாடிக்கையாகியுள்ளது. இதனால், குறிப்பாக இரவு நேரங்களில் இப்பகுதிகளில் வரும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வருபவர்கள் சாலையில் திடீரெனக் குறுக்கிடும் கால்நடைகள் மற்றும் நாய்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை இரவு நேரங்களில் வீடுகளுக்குள் பாதுகாப்பாக அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


