விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் தனியார் நிறுவனப் பொறியாளர் உயிரிழந்தார்.
ராஜபாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்த முத்து மாரியப்பன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் சிக்கினார். கார் மீது மோதாமல் இருக்க அவர் முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும், அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது ஏறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே முத்து மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்து, அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த முத்து மாரியப்பனுக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

