திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் அமைந்துள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கழிவறையில் கழிவுநீர் தேங்கிப் புழுக்கள் உருவாகியுள்ளதால் டெங்கு உள்ளிட்ட நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்திற்குத் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கழிவறை முறையாகப் பராமரிக்கப்படாமல் தூய்மையற்ற நிலையில் காணப்படுகிறது. அங்கு கழிவுநீர் தேங்கிப் புழுக்கள் உற்பத்தியாகியுள்ளதால், பொதுமக்கள் அதைப் பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், கழிவறைக்கு அருகில் பழைய பதிவேடுகள் வைக்கப்பட்டுள்ள அறையும் அமைந்துள்ளதால், உரிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் கோரப்பட்டுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, கழிவறையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

