வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள கட்டிப்பட்டு மலை ஊராட்சியில் போதிய சாலை வசதி, பேருந்து சேவை மற்றும் குடிநீர் இன்றி 15-க்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கட்டிப்பட்டு மலை ஊராட்சியில் 12-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தாமரைகுட்டை கிராமத்தில் தொடங்கி கட்டிப்பட்டு வழியாக தேந்தூர் மலைகிராமம் வரை செல்லும் சுமார் 10 கிலோமீட்டர் நீளமுள்ள வனச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பழுதடைந்து காணப்படுகிறது. ஜல்லி கற்கள் மற்றும் முட்கள் நிறைந்த கரடுமுரடான பாதையாக இந்தச் சாலை மாறிவிட்டதால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் இச்சாலை முற்றிலும் சேறும் சகதியுமாக மாறி போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும், நியாயவிலைக் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதிலும், அவசர காலங்களில் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதிலும் பெரும் சவால்கள் நிலவுகின்றன. ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், நோயாளிகளை இருசக்கர வாகனங்களிலோ அல்லது டோலி கட்டியோ தூக்கிச் செல்லும் அவல நிலை தொடர்கிறது.
கட்டிப்பட்டு, தேந்தூர், குடிகம், அரசவள்ளி, புளியமரத்தூர், புதூர், பிள்ளையார்குட்டை உள்ளிட்ட 15 கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த வனச்சாலையை சீரமைக்க கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.2.20 கோடிக்கு ஒப்பந்தம் கோரப்பட்ட போதிலும், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் உடனடியாக தலையிட்டு, சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

