திருவாரூர் உழவர் சந்தை வளாகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை சந்தையை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தார்.
இயற்கை மற்றும் அங்ககச் சான்று பெற்ற விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பெறப்படும் விளைபொருட்களை, திருவாரூர் மாவட்ட மக்கள் எளிதில் வாங்கும் வகையில் இந்தச் சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை சந்தையானது வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடக்க விழாவைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் உழவர் சந்தை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், வருவாய் கோட்டாட்சியர் சத்யா மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

