தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், திருப்பூர் மாநகரின் முக்கிய கடைவீதிகளில் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருவதால் தீபாவளி ஷாப்பிங் களைகட்டத் தொடங்கியுள்ளது.
பின்னலாடை தொழிலில் உலக அளவில் தனி மகத்துவம் பெற்ற திருப்பூரில், 500-க்கும் மேற்பட்ட ஏற்றுமதி ஆடை நிறுவனங்களும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், வருகிற 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் தீபாவளி ஷாப்பிங்கில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால், திருப்பூர் கடைவீதிகளில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக புத்தாடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், பேன்சி பொருட்கள், மொபைல் போன்கள் மற்றும் தங்க நகைகள் வாங்குவதற்காக பொதுமக்கள் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
திருப்பூர் புது மார்க்கெட் வீதி, குமரன் சாலை, மாநகராட்சி சந்திப்பு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் சாலையோரக் கடைகளில் விற்பனை களைகட்டியுள்ளது.
இதற்கிடையே, மக்கள் கூட்டம் அதிகரிப்பால் குமரன் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், குமரன் சாலையில் பாதசாரிகள் பாதுகாப்பாக நடந்து செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாநகராட்சி சந்திப்பு மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பின்னலாடை தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க ஆர்வத்துடன் கடைவீதிகளில் குவிந்து வருவதால், திருப்பூர் மாநகரமே தற்போது தீபாவளி கொண்டாட்டக் களமாக மாறியுள்ளது.

