திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் அருகே பாதாள சாக்கடை ஓடையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தச்சநல்லூர் பகுதிக்கு அருகே உள்ள பாதாள சாக்கடை ஓடையில் பச்சிளம் குழந்தையின் சடலம் கிடப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தச்சநல்லூர் காவல்துறையினர், குழந்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், உயிரிழந்த குழந்தை யாருடையது? குழந்தையை இந்தப் பகுதிக்குக் கொண்டு வந்து வீசிச் சென்றது யார்? குழந்தையின் இறப்புக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை ஓடையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


