ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா நாளை அரசு சார்பில் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பாதுகாப்புப் பணிகளுக்காக மாவட்டம் முழுவதும் சுமார் 10,000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவட்டத்தில் பதற்றமான இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளைக் கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 38 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, வாகனச் சோதனைகளைத் தீவிரப்படுத்த 59 இருசக்கர வாகன சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சட்டம்-ஒழுங்கைப் பேணிக்காக்கும் வகையில் மாவட்டத்தில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

