திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள அரப்பாண்டகுப்பம் கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 20 இளைஞர்களை அம்பலூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
தேவஸ்தானம் ஊராட்சிக்கு உட்பட்ட அரப்பாண்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தங்கள் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்துத் தர வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 20 இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவல்துறையினர், மறியலில் ஈடுபட முயன்ற இளைஞர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

