Settings

முகப்பு/நகரங்கள்/அதிர்ச்சி! 10 நாட்களாகப் பதப்படுத்தப்பட்ட அழுகிய ஆட்டிறைச்சி ஓட்டல்களுக்கு சப்ளை - பகீர் பின்னணி!
நகரங்கள்

அதிர்ச்சி! 10 நாட்களாகப் பதப்படுத்தப்பட்ட அழுகிய ஆட்டிறைச்சி ஓட்டல்களுக்கு சப்ளை - பகீர் பின்னணி!

🕒 29 அக்., 2026, 08:02 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨

AI Highlights

  • •நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகளின் 250 கிலோ அழுகிய இறைச்சியை ஓட்டல்களுக்கு விற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகளின் இறைச்சியைப் பதப்படுத்தி, உள்ளூர் உணவகங்களுக்கு விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து சுமார் 250 கிலோ அழுகிய ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

மூலைக்கரைப்பட்டி மெயின் பஜாரில் உள்ள இறைச்சிக் கடைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகளின் கறி விற்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, அதிகாரி ஜெகநாத் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு கடை நடத்தி வரும் மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த வானமாமலை (50) என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கிடைத்ததை அடுத்து, அதிகாரிகள் அவரது வீடு மற்றும் குடோனில் சோதனை நடத்தினர். அங்குள்ள பிரீசர் பெட்டிகளில் நோய்வாய்ப்பட்டு மற்றும் முதுமையால் இறந்த சுமார் 20 ஆடுகளின் இறைச்சி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த இறைச்சிகள் சுமார் 10 நாட்களுக்கும் மேலாகப் பதப்படுத்தப்பட்டு, கடுமையான துர்நாற்றத்துடன் புழுத்துப் போய் இருந்தன. வானமாமலை இந்த விஷத்தன்மை கொண்ட அழுகிய கறியைத் தனது கடையிலும், நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களுக்கும் குறைந்த விலைக்கு விநியோகம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அங்கிருந்த 250 கிலோ அழுகிய ஆட்டிறைச்சியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அந்த இறைச்சிகள் முழுமையாக அழிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔