திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை நகர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாம் சாலமன் பிரபாகர் டேவிட் (35). டேவிட் என்பவரது மகனான இவர், தனது இருசக்கர வாகனத்தில் சாந்தி நகர் செல்லும் சாலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த இரண்டு மர்ம நபர்கள், சாம் சாலமனின் வாகனத்தை வழிமறித்து கீழே தள்ளியுள்ளனர். பின்னர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த சாம் சாலமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பாளையங்கோட்டை காவல் நிலையையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, கொலை நடந்த இடத்தை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த சாம் சாலமன் பிரபாகர் டேவிட் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதியில் அரங்கேறியுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாகியுள்ள கொலையாளிகள் இருவரையும் பிடிக்கக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

