வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சிங்காரெட்டியூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துப் பொருட்கள் நள்ளிரவில் வெடித்துச் சிதறிய விபத்தில், வெடிமருந்து கிடங்கு முழுமையாகத் தரைமட்டமானது. இச்சம்பவம் தொடர்பாக மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை (PESO) அதிகாரிகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சிங்காரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன். இவரது விவசாய நிலத்தில் உள்ள பம்ப் செட்டுக்குள் சில தினங்களுக்கு முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் நான்கு மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை திறந்து பார்த்தபோது, நாட்டுப் பட்டாசுகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் கந்தகம், வெடிமருந்துகள், நூல் கயிறு, சணல் மற்றும் மருந்துத் திரிகள் உள்ளிட்ட சுமார் 50 கிலோ மூலப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காட்பாடி காவல்துறையினர் அந்த வெடிபொருள் மூட்டைகளைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வق்கு விசாரணைக்காகப் பறிமுதல் செய்யப்பட்ட அந்த வெடிபொருள் மூலப்பொருட்கள், கே.வி.குப்பம் அடுத்த அர்ஜுனாபுரம் பகுதியில் உள்ள பத்மநாபன் என்பவருக்குச் சொந்தமான வெடிமருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நள்ளிரவில் அந்தக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் வெடிமருந்து கிடங்கின் கட்டடம் முழுமையாக இடிந்து தரைமட்டமானது. மேலும், கிடங்கின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மினி வேன்கள் பலத்த சேதமடைந்தன. விபத்தின் தாக்கத்தால் தூக்கி வீசப்பட்ட கிடங்கின் இரும்புக் கதவு தாக்கியதில், அருகில் இருந்த கன்றுக்குட்டி ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த அதிபயங்கர வெடிச்சத்தத்தால் சுற்றுவட்டார கிராம மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்து நடந்த நேரத்தில் கிடங்கில் ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கே.வி.குப்பம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு நிறுவனமான பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் (PESO) வேலூர் துணை வட்டக் கட்டுப்பாட்டு அதிகாரி நந்தி தலைமையிலான உயர் மட்டக் குழுவினர், தடய அறிவியல் துறை நிபுணர்கள், காட்பாடி வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து சம்பவ இடத்தில் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் சிதறிக்கிடந்த நூல்கள், ரசாயனத் துகள்கள் மற்றும் மருந்து மாதிரிகளை தடய அறிவியல் நிபுணர்கள் சேகரித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மூலப்பொருட்கள் எந்த வகையானவை, அதில் கலக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்கள் எவை என்பது குறித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.







