ஈரோட்டில் ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு, லஞ்சத்திற்கு எதிராக பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
ஈரோடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இப்பேரணி, ஈரோடு தலைமை மருத்துவமனை ரவுண்டானாவில் தொடங்கியது. பேரணியானது பிரப் சாலை, மோகன் குமாரமங்கலம் வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாகச் சென்றது.
இப்பேரணியில் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு, 'லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம்', 'லஞ்சமற்ற நிர்வாகம் லட்சியமான சமூகம்', 'கொடுக்காதீர் லஞ்சம் கொடுக்காதீர்' உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், பொதுமக்களிடையே ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

