ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா நாளை (அக்டோபர் 30) அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாளை காலை 9 மணியளவில், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு வருகை தந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, சட்டம்-ஒழுங்கு மற்றும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 103 பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.



