தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், அவசரகால துப்புரவுப் பணி பொறுப்பு ஆணையம் (ERSA) குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, துப்புரவுப் பணிகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுத்து 'பூஜ்ய உயிரிழப்பு' என்ற நிலையை எட்ட ERSA அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள் எந்தவொரு செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடைக்குள்ளும் மனிதர்கள் நேரடியாக இறங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பணிகளும் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் நவீன இயந்திரங்கள் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். தனியார் கழிவுநீர் லாரிகளுக்கு முறையான உரிமம் வழங்கப்பட்டு, அவை ஜி.பி.எஸ் (GPS) மூலம் கண்காணிக்கப்படும் என்றும், அவசரகாலத் தேவைகளுக்காக 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை இயங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத விதிவிலக்கான சூழல்களில் பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், முழு உடல் பாதுகாப்பு உடை (PPE Kit), முகக்கவசம், கையுறைகள் மற்றும் நச்சு வாயுவைக் கண்டறியும் 'கேஸ் டிடெக்டர்' கருவி கொண்டு ஆய்வு செய்த பிறகே பணிகள் தொடங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாரம்பரியமாக இப்பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு 'கழிவுநீர் சுத்திகரிப்பு வல்லுநர்களாக' மாற்றப்படுவர் என்றும், 'நமஸ்தே' (NAMASTE) திட்டத்தின் கீழ் அவர்களுக்குக் காப்பீடு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. விதிகளுக்குப் புறம்பாகச் செப்டிக் டேங்க் மற்றும் பாதாள சாக்கடைக்குள் மனிதர்களை இறக்கும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

