திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 48-வது வார்டு மேல கருங்குளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் பட்டியல் இன மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
கடந்த 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மாநகராட்சி சார்பில் சாலை, கழிவுநீர் கால்வாய் மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்பட்டன. இருப்பினும், கடந்த 25 ஆண்டுகளாக புதிய சாலைகள் அமைக்கப்படவில்லை என்றும், பழுதான தெருவிளக்குகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், கொக்கிரகுளம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பாளையங்கோட்டை வட்டாட்சியர் மாரி ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.



