தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 43 மையங்களில் மொத்தம் 12,494 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி தாலுகாவில் 14 மையங்களும், பாளையங்கோட்டை தாலுகாவில் 22 மையங்களும், அம்பாசமுத்திரம் தாலுகாவில் 7 மையங்களும் என மொத்தம் 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வை முன்னிட்டு மையங்களில் தேவையான பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு நடவடிக்கைகளைத் துல்லியமாகக் கண்காணிக்க அனைத்து மையங்களிலும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தங்களுக்கான தேர்வு மையங்களை முன்கூட்டியே அறிந்து, உரிய நேரத்தில் வருமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. காலை 9 மணி வரை மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
மேலும், தேர்வு மையங்களுக்குள் செல்போன், கேமரா, புளூடூத் சாதனங்கள் மற்றும் எலக்ட்ரானிக் கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்குப் பின்னரே தேர்வர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வருபவர்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.



