தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (குரூப் 2 மற்றும் 2ஏ) முதல்நிலைத் தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தத் தேர்வை எழுத மொத்தம் 4,758 தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை கோட்டத்தில் 11 மையங்களும், சீர்காழி கோட்டத்தில் 6 மையங்களும் என மொத்தம் 17 தேர்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மயிலாடுதுறை கோட்டத்தில் 3,240 பேரும், சீர்காழி கோட்டத்தில் 1,518 பேரும் தேர்வினை எழுதுகின்றனர்.
தேர்வுப் பணிகளை முறைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 17 முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வுப் பொருட்களைப் பாதுகாக்க காவல் பாதுகாப்புடன் கூடிய 6 நடமாடும் குழுக்கள், 17 ஆய்வு அலுவலர்கள் மற்றும் தேர்வு நடவடிக்கைகளைப் பதிவு செய்ய 17 புகைப்படக் கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்ற தேர்வர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் தரைதளத்திலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையற்ற தேர்வர்களுக்குத் தேர்வு எழுதத் தேவையான உதவியாளர்களும் (Scribe) ஒதுக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்குள் கைப்பேசி, கணிப்பான் (Calculator) உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்குப் பிறகு தேர்வர்கள் அனைவரும் காலை 9 மணிக்குள் தேர்வுக்கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.





