Settings

முகப்பு/நகரங்கள்/50% நிறுவனங்கள் மூடல்! திருப்பூரில் தீபாவளிக்குப் பின் வெடிக்கும் பின்னலாடைத் தொழிலாளர்களின் போராட்டம்!
நகரங்கள்

50% நிறுவனங்கள் மூடல்! திருப்பூரில் தீபாவளிக்குப் பின் வெடிக்கும் பின்னலாடைத் தொழிலாளர்களின் போராட்டம்!

🕒 29 அக்., 2026, 09:16 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨

AI Highlights

  • •மூலப்பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் தீபாவளிக்குப் பின் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என அனைத்துத் தொழில் முனைவோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பூரின் முக்கியத் தொழிலாக விளங்கும் பின்னலாடைத் துறை, கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், மூலப்பொருட்களின் அதிரடி விலை உயர்வைக் கண்டித்தும், இதற்குத் தீர்வு கோரியும் தீபாவளிக்குப் பிறகு கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என அனைத்துத் தொழில் முனைவோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

திருப்பூரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முத்துரத்தினம் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டு, தங்களின் தற்போதைய அவல நிலையை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது குறித்து விவாதித்தனர்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முத்துரத்தினம் கூறியதாவது: நூல் மற்றும் பாலியஸ்டர் நூல் உள்ளிட்ட அனைத்து மூலப்பொருட்களின் விலை உயர்வாலும், சாயம் பூசும் (டையிங்) கட்டண உயர்வாலும் உற்பத்திச் செலவு 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் புதிய ஆர்டர்களைப் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றார்.

சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திருப்பூரில், 90 சதவீதத்திற்கும் அதிகமானவை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) நிறுவனங்களாகும். இதில் ஏற்கனவே 50 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ளவையும் மூடும் அபாயத்தில் உள்ளன. எனவே, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாகத் தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்தக் கோரிக்கைகளைக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தீபாவளிக்குப் பிறகு போராட்டம் வெடிக்கும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், திருப்பூரில் அமைக்கப்பட உள்ள 'பின்னலாடை வாரியம்' சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மீட்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் எனவும், அதில் MSME பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔