திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தைத் திருட முயன்ற வாலிபர் பொதுமக்களிடம் சிக்கிய நிலையில், அங்கிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்றம்பள்ளி காவல் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தைத் திருட முயன்றுள்ளார். இதனைக் கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மடக்கிப் பிடித்துத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த வாலிபரைப் பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (28) என்பது தெரியவந்தது. பின்னர் காயமடைந்த அவரை நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்துச் சிகிச்சை அளித்த பின், காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் விசாரணையின் போது, அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கக் காவல்துறையினர் முடிவு செய்ததாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த வாலிபர் காவல் நிலையத்திலிருந்து ஓட்டம் பிடித்தார்.
உடனடியாகக் காவல்துறையினர் அவரைப் பின் தொடர்ந்ததுடன், சாலையில் இருந்த பொதுமக்களும் இணைந்து அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை மீட்டு மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

