Settings

முகப்பு/நகரங்கள்/மழைநீரை சேமிப்போம்! திருச்சியில் மாணவ-மாணவிகளுடன் கைகோர்த்த மாநகராட்சி ஆணையர்!
நகரங்கள்

மழைநீரை சேமிப்போம்! திருச்சியில் மாணவ-மாணவிகளுடன் கைகோர்த்த மாநகராட்சி ஆணையர்!

🕒 3 நவ., 2026, 08:38 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
மழைநீரை சேமிப்போம்! திருச்சியில் மாணவ-மாணவிகளுடன் கைகோர்த்த மாநகராட்சி ஆணையர்! - படம் 1
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு மழைநீரை சேகரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. ஆணையர் பொன்மணி நிகழ்வைத் தொடங்கி வைத்து பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மழைநீரைச் சேகரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வை திருச்சி மாநகராட்சி ஆணையர் பொன்மணி கொடியசைத்துத் தொடங்கி வைத்து, மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

இந்நிகழ்வில் துணை மேயர் திவ்யா, மாநகராட்சி மண்டலக் குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் திரளான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்கள் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்தும் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

ஆணையர் பேட்டி

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பொன்மணி கூறியதாவது:

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் மாநகராட்சி, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பள்ளி மாணவர்களின் ஒத்துழைப்போடு இந்த மனித சங்கிலி நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏற்கனவே அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாத மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உடனடியாக சீரமைக்கப்படும். மேலும், நகர திட்டமிடல் மற்றும் டி.டி.சி.பி ஒப்புதல் பெறும் அனைத்துக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த 2 முதல் 3 மாதங்களில் இத்திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், திடக்கழிவு மேலாண்மை மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகள் அட்டவணைப்படி தினமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், குப்பைகளை அவசரமாகக் கொட்டிச் செல்லும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றைச் சுத்தம் செய்து அழகுபடுத்தும் பணிகள் மற்றும் செல்ஃபி பாயிண்ட்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். குப்பைகளைப் பிரித்து வழங்கும் வீடுகளுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டி ஊக்கப்படுத்தப்பட்டு வருவதாகவும், பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே மாநகராட்சியை மேலும் தூய்மையாகப் பராமரிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் தொடர்பாக நிலுவையில் உள்ள ரூ. 3 கோடி நிதியைத் திரும்பப் பெறுவது குறித்து, ஸ்ரீரங்கத்திற்குப் புதிதாகப் பொறுப்பேற்கும் இணை ஆணையருடன் கலந்தாலோசித்து விரைவில் நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் என்றார். மேலும், அனுமதியற்ற பிளெக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகளை அகற்ற மண்டலம் வாரியாக அட்டவணை தயாரிக்கப்பட்டு நாள்தோறும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாநகராட்சியின் தடையில்லாச் சான்று இல்லாமல் பேனர்களை அச்சிடும் நிறுவனங்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மத்திய பேருந்து நிலையம் - வெஸ்ட்ரி பள்ளி சாலையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் அனுமதியற்ற தள்ளுவண்டி மற்றும் சாலையோரக் கடைகளை ஸ்வநிதி திட்டத்தின் கீழ் முறைப்படுத்தவும், மாற்று இடங்கள் ஒதுக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உறையூர் மார்க்கெட் ஏலம் மூலம் எதிர்பார்த்த தொகை கிடைக்காததால், தற்போது மாநகராட்சியே நேரடியாகச் சந்தையை நடத்திட முடிவு செய்துள்ளதாகவும் ஆணையர் பொன்மணி தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔