வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் அருகே பெங்களூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்து, காலி மதுப் பாட்டில்களை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பெங்களூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற வாணியம்பாடியைச் சேர்ந்த தனியார் சொகுசுப் பேருந்து, வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, வாணியம்பாடியிலிருந்து சென்னை மதுராந்தகத்திற்கு காலி மதுப் பாட்டில்களை ஏற்றிச்சென்ற லாரி மீது இப்பேருந்து பின்புறமாக மோதியது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு, எதிர்திசையிலிருந்த பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலைக்குச் சென்று நின்றது.
இந்த விபத்தில் காலி மதுப் பாட்டில்களை ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்ததால், சாலை முழுவதும் கண்ணாடித் துண்டுகள் சிதறிக்கிடந்தன. இச்சம்பவத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் பேருந்து கிளீனர் ஆகிய இருவருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டன. நல்வாய்ப்பாக, பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் உயிர் தப்பினர்.
இந்த விபத்து காரணமாக சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கங்களிலும் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் மற்றும் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி ஊழியர்கள், போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து காரணமாக அலமேலுமங்காபுரத்திலிருந்து சத்துவாச்சாரி வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், காலையில் பணிக்குச் செல்வோரும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்வோரும் கடும் அவதிக்குள்ளாகினர். முதற்கட்ட விசாரணையின்படி, தனியார் சொகுசுப் பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதும், ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமுமே விபத்திற்குக் காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

